விருத்தாச்சலம் அருகே தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய தொடர் விபத்துகள்

தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான தனியார் பேருந்துகளில், ஓட்டுநரின் இருக்கைக்கு அருகே அதிக சத்தத்துடன் ரேடியோ மற்றும் பாடல்களை ஒலிக்கவிட்டு, கவனச்சிதறலுடன் வாகனங்களை இயக்குவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சாலையோரத்தில் குழந்தைகள், பொதுமக்கள் அல்லது பிற வாகனங்கள்ச் சென்றாலும் அதைப் பொருட்படுத்தாமல், அதிக வேகத்துடனும் அலட்சியத்துடனும் பேருந்துகளை இயக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

வாகனத்திற்கு இன்சூரன்ஸ் போடப்பட்டுள்ளது மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளது என்ற தைரியத்தில், பயணிகள் மற்றும் பாதசாரிகளின் உயிரைப் பற்றிய எவ்வித பயமும் இன்றி சிலர் பொறுப்பற்ற முறையில் வண்டிகளை இயக்குகின்றனர். விபத்து நடந்தால் இன்சூரன்ஸ் பார்த்துக்கொள்ளும் என்ற அலட்சிய மனப்பான்மையே இதுபோன்ற விபத்துகளுக்கு முதன்மை காரணமாக அமைகிறது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தமிழக அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடைமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநர்களை உடனடியாகக் கைது செய்து, குறைந்தபட்சம் ஒரு மாத காலம் விசாரணை கைதியாகச் சிறையில் அடைக்க வேண்டும். இந்த நடவடிக்கை மட்டுமே ஓட்டுநர்களிடம் முறையான நிதானத்தையும் பொறுப்புணர்வையும் கொண்டுவரும். மேலும்,

ஒரு தனியார் பேருந்து தொடர்ந்து விபத்துகளில் சிக்கும் பட்சத்தில், குறிப்பாக மூன்றாவது முறை விபத்து ஏற்படுத்தினால், அந்த வாகனத்தின் இயக்க அனுமதியை ரத்து செய்து, வாகனத்தை முழுமையாக அரசு பறிமுதல் செய்ய வேண்டும். அதேபோல, ஓட்டுநரின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் அதிக சத்தத்துடன் இயக்கப்படும் ஒலிபெருக்கிகள் மற்றும் ரேடியோ பயன்பாட்டிற்குப் பேருந்துகளுக்குள் முற்றிலுமாகத் தடை விதிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிர்ப்பலிகளைத் தடுக்கவும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.