கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திடீரென பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த கடும் வெப்பம் தணிந்ததால், பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருத்தாச்சலம் மற்றும் அதன் முக்கியப் பகுதிகளில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் புழுக்கத்தால் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், மாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பலத்த மழையாகக் கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால், நகரின் முக்கிய வீதிகள் மற்றும் பஜார் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சற்று சிரமப்பட்டனர்.
விருத்தாச்சலம் ஒரு முக்கிய விவசாயப் பகுதி என்பதால், தற்போதைய திடீர் மழை நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயக் கிணறுகளில் நீர்வரத்தை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காய்கறி மற்றும் பயிர் வகைகளுக்கும் இந்த மழை அத்தியாவசியமாக இருந்ததால், கிராமப்புற மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.



