கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து, வேறு பகுதிக்குக் குடிநீர் கொண்டு செல்லும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கச்சிராயநத்தம் கிராம மக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே அமைந்துள்ள கச்சிராயநத்தம் கிராமத்தின் கிழக்குத் தெரு பகுதியில் நீண்டகாலமாகக் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில், அப்பகுதி மக்களின் தேவைக்காகப் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.
ஆனால், கிராம மக்களின் குடிநீர்த் தேவையை முதலில் பூர்த்தி செய்யாமல், அந்த நீர் ஆதாரத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு பகுதிக்குக் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
ஏற்கெனவே தங்கள் கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் வேறு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டால், தங்களது குடிநீர்த் தேவை மேலும் பாதிக்கப்படும் என கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கிராமத்தின் தேவைக்காக உருவாக்கப்பட்ட நீர் ஆதாரம், முதலில் அந்தக் கிராம மக்களின் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
இதுதொடர்பாக, கச்சிராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் தலைமையில் பொதுமக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், வேறு பகுதிக்கு வழங்கப்பட உள்ள குடிநீர் இணைப்பை ரத்து செய்து, கச்சிராயநத்தம் கிராம மக்களின் குடிநீர்த் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்


