பணி நிரந்தரம், தற்செயல் விடுப்பு, பணி மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பாக போராடவிருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் அடைத்து வைத்ததோடு, அதனை மீறி போராட வந்தவர்களை குண்டுக்கட்டாக கைது செய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் குரலை கேட்பதுதான் மக்களாட்சி. அவர்களின் குரலை ஒடுக்க முயல்வது கொடுங்கோல் ஆட்சி. ஜனநாயகம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான போராட்ட உரிமையைப் பயன்படுத்தி தங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்ற பணியாளர்களை குற்றவாளிகளைப் போல சித்தரித்து வீட்டுக்காவலில் வைத்ததும், கைது செய்ததும் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும் என அவர் குறிப்பிட்டார்.
தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் தொடங்கி விவசாயிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மின்சாரத்துறை பணியாளர்கள் என அனைவரும் நாள்தோறும் தங்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், “அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு” என முதலமைச்சர் ஜோசப் விஜய் பெருமை பேசிக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது என தினகரன் தெரிவித்தார்.
போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டத் தலைவர்களை வீட்டுக்காவலில் அடைப்பது, காவல்துறையைப் பயன்படுத்தி அடக்குமுறையை ஏவுவது என தவெக ஆட்சியில் நடைபெற்று வரும் அத்துமீறல்கள், “நாம் தமிழகத்தில் தான் வாழ்கிறோமா அல்லது அடிமை நாட்டில் வாழ்கிறோமா?” என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும். அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முன்வர வேண்டும் என மருத்துவத்துறையையும் தவெக அரசையும் டி.டி.வி. வலியுறுத்தியுள்ளார்.



