கடலூரில் அண்ணா மேம்பாலம் அருகே மற்றொரு புதிய மேம்பாலம் திறக்கப்பட்டும், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேம்பாலம் மட்டும் கட்டினால் நெரிசல் தீர்ந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மாறாக, லாரன்ஸ் ரோடு ஜங்ஷன், அண்ணா பாலம் பகுதி, சிதம்பரம் பக்கமிருந்து பஸ் ஸ்டாண்ட் திரும்பும் வழி, நியூ சினிமா தியேட்டர் அருகே, புதுப்பாளையம் காளி கோயில் அருகே என பல இடங்களில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

முதல் பிரச்சினை, லாரன்ஸ் ரோடு ஜங்ஷனில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா. அண்ணா பாலம் பக்கமாக நிறைய இடம் இருக்கும்போது, ரவுண்டானாவை சற்று தள்ளி அமைத்திருந்தால், சிதம்பரத்திலிருந்து வந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி திரும்பும் பஸ்கள் மற்றும் வாகனங்களுக்கு கூடுதல் இடம் கிடைத்திருக்கும். ஆனால் தற்போது அந்த இடத்தில் திருப்புமுனை இடநெருக்கடியாக மாறியுள்ளது.

இரண்டாவது, சாலைகளை திருப்பிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரீட் கட்டைகள். இவை மிக அகலமாக அமைக்கப்பட்டுள்ளதால், சாலையில் வாகனங்கள் நகர்வதற்கான இடம் குறைகிறது. அதே பகுதிகளில் இந்தக் கட்டைகள் சிங்கிள் கட்டை அல்லது குறுகிய ஒற்றைக் கட்டையாக அமைக்கப்பட்டிருந்தால், போக்குவரத்துக்கு அதிக இடம் கிடைத்திருக்கும். குறிப்பாக நியூ சினிமா தியேட்டர் அருகே வரும் வாகனங்களுக்கு ஸ்பீட் பிரேக் அமைக்கப்பட்டுள்ளது. இது விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மூன்றாவது, புதுப்பாளையம் காளி கோயில் அருகாமையில் அரசு சாலை விதிகளுக்கு அப்பாற்பட்டு காங்கிரீட் கட்டை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பணிகள் திட்டமிடலின்றி, விதிமுறைகளை மீறி நடைபெறுவதால், மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்ற கடும் அதிருப்தி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், முக்கிய சாலையாக திகழும் லாரன்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் மால் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற திட்டமிடப்படாத சாலைப் பணிகள் மற்றும் அனுமதிகளால் கடலூர் போக்குவரத்து போலீசார் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

உண்மையில், கடலூர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமெனில், ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் தேவை. ரவுண்டானா அமைப்பை மறுபரிசீலனை செய்து, சாலை வடிவமைப்பை மாற்றி, காங்கிரீட் கட்டைகளை தேவையான அளவில் குறுகலாக அமைத்து, அறிவியல் பூர்வமான ஸ்பீட் பிரேக்குகளை பொருத்தி, மால் உள்ளிட்ட பெரிய கட்டிடங்களுக்கு போக்குவரத்து தாக்க ஆய்வு கட்டாயமாக்கி, பொதுமக்களின் கருத்தை கேட்டு செயல்படுத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இல்லையெனில், புதிய மேம்பாலங்கள் திறந்தாலும் நெரிசல், விபத்து, மக்கள் அதிருப்தி ஆகியவை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.