ஒரு காலத்தில் நாட்டிலேயே சிறந்த காவல்துறை என பாராட்டப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறியுள்ளது என வி த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக பல இளம் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும் குற்றம் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை என காரணம் கூறி தமிழ்நாடு காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றதாக அவர் கூறினார். ஆனால் அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலதிக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த 2025 அக்டோபர் மாதம், ஒரு குழந்தைகள் நல தன்னார்வலர் பென் டிரைவ் மூலம் ஆதாரம் கொடுத்த பிறகு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது.
விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி (84 வயது) மற்றும் அவருடன் தொடர்புடையவர்களான சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 29 அன்று சென்னை பெருநகர காவல்துறையின் ஒழுக்கக்கேடு தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறை விசாரணையில் மேலும் ஏழு சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்ற காலத்தில் சிறார்களாக இருந்தவர்கள் என்றும், இதன் மூலம் இந்த குற்றச்செயல்கள் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்றும் தெரியவருகிறது. இந்த ஏழு பேரின் வாக்குமூலங்கள் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேர்மையான மற்றும் உறுதியான காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த வழக்கு எடுத்துக்காட்டு என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றிய அவர், வீரமணி தொடர்பான வீடியோவை தனது மொபைல் போனில் வைத்திருந்ததாகவும், காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்ததாகவும் கூறி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது போனில் வீடியோ இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணை வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் முடிவடைந்து விடக்கூடாது என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக அவரை பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாக செயல்படவும் உதவிய ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியும், தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போக முயற்சித்த ஒவ்வொரு நபரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
இந்த வழக்கில் மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தகவல் அறிக்கையில் பெயர் வரக்கூடாது என்பதற்காக சுமார் 70 கோடி ரூபாய் வரை லஞ்சமாக செட்டில்மென்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 130 கோடி மதிப்புள்ள சொத்தை 70 கோடிக்கு விற்று அந்த பணம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே இத்தனை ஆண்டுகளாக இந்த குற்றச்செயல்கள் தொடர அனுமதித்த அத்தனை நபர்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக உடனடியாக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம் என்றும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களின், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின் அடையாளங்களும் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



