உடையகுளம் பேரூராட்சி 13-வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயவாணியின் கணவரும், திமுக பிரமுகருமான முருகன் (வயது 55) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி (வயது 60) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த ஆறுச்சாமி கையில் இருந்த அரிவாளால் முருகனை வெட்டியதில் அவரது வலது கை துண்டானது. அவரை மீட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் துண்டான கை மீண்டும் இணைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸ் நடவடிக்கை: இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் ஆறுச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப விசாரணையில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் முருகனின் சகோதரி வசிப்பதாகவும், அதற்கு அருகில் ஆறுச்சாமியின் வீடு உள்ளதாகவும், இரு வீடுகளுக்கு இடையே உள்ள பொது இடத்தை பயன்படுத்துவதில் தகராறு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். விறகு வெட்டச் சென்றபோது தாக்குதல் நடந்ததாகவும் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் பாதிக்கப்பட்டவர் பட்டியலினத்தைச் (அருந்ததியர் / சக்கிலியர் சமூகம்) சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, தற்போது இந்த வழக்கில் SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை குற்றச்சாட்டுகளுடன் பகிரப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பம் பரம்பரை திமுக குடும்பம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து ரூ.6 லட்சம் நிவாரண உதவி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.