கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரின் முக்கிய பகுதியான பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நேற்று மாலை பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா பகுதி எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் அந்த வழியாக தினமும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரை அங்கு நின்று கொண்டிருந்த சில திருநங்கைகள் வழிமறித்துள்ளனர். பெண்ணின் தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பது போல் பணம் கேட்டுள்ளனர். அந்த பெண் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்த அவர்கள், தொடர்ந்து வற்புறுத்தி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண் கையில் வைத்திருந்த பேக் மற்றும் உடைமைகளை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பெண் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் கூடியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதே போல் கடந்த சில நாட்களாக பாலக்கரை ரவுண்டானா, பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் பொதுமக்களிடம், குறிப்பாக தனியாக செல்லும் பெண்களிடம் வலுக்கட்டாயமாக பணம் கேட்பதும், பணம் கொடுக்க மறுத்தால் தரக்குறைவாக பேசுவதும், அச்சுறுத்துவதும் தொடர் கதையாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொது இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறும் பொதுமக்கள், இது போன்ற அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீது விருத்தாசலம் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரவுண்டானா பகுதியில் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



