திண்டுக்கல்லில் சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனம் வாடகை அடிப்படையில் இயக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உரிமை குரல் ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் அந்த வாகனத்தைப் பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் தமிழ்நாடு வாணிபக் கழக அதிகாரி ஒருவரின் பயன்பாட்டிற்காக ஒப்பந்த அடிப்படையில் சொந்தப் பயன்பாட்டு வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக உரிமை குரல் ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஏற்கெனவே இரண்டு முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனச் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்
இந்நிலையில், இன்று உரிமை குரல் ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து, தமிழ்நாடு வாணிபக் கழக அதிகாரியின் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறப்படும் அந்த வாகனத்தைப் பிடித்து திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
சொந்தப் பயன்பாட்டிற்காகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுவது தங்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உரிமை குரல் ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் கூறுகையில், மாவட்ட நிர்வாகமும் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், முறையாக அனுமதி பெற்று வாடகை வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்தகட்டமாகப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனச் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், தங்களுக்கும் சொந்தப் பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்கும் நிலை ஏற்பட்டால், சுற்றுலா வாகனப் பதிவை நீக்கிவிட்டு சொந்தப் பயன்பாட்டு வாகனங்களையே இயக்குவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர்கள் சங்கத்தினரின் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு வகை, பயன்பாடு மற்றும் ஒப்பந்த விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



