கடந்த மாதம் இலங்கையின் பிரபல தேயிலை நிறுவனமான தில்மா (Dilmah), இந்தியாவில் தனது ‘தம்பபன்னி’ (Thambapanni) உயர்தர தேயிலைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தைக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தேயிலை, ஆரம்ப கட்டமாக ஆடம்பர ஓட்டல்கள் மற்றும் உயர்தர விருந்தோம்பல் துறையை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 10 உயர்தர தேயிலை அரங்குகளை அமைக்க 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்ய தில்மா திட்டமிட்டுள்ளது.

இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இலங்கைக்கு தனக்கென செழுமையான சிலோன் தேயிலை பாரம்பரியம் இருந்தாலும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இளவரசர் விஜயர் நிறுவியதாகக் கூறப்படும் அரசின் பெயரால் அழைக்கப்படும் இந்தத் தொகுப்பு, பெரும்பாலும் இந்திய விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தேயிலை, மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

“இந்தியா சில மிகச்சிறந்த தேயிலைகளை உற்பத்தி செய்கிறது. எனவே, இந்தியாவுக்கு நான் இலங்கை தேயிலையை கொண்டு வரப் போவதில்லை” என்று தில்மா நிறுவனத்தின் தலைவர் தில்ஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலை நிறுவனம் ஒன்று இந்திய தேயிலையைப் பயன்படுத்தி வசதிபடைத்தவர்களையும், உயர்தர தேயிலை குறித்து ஆர்வம் அதிகரித்து வரும் இந்திய நுகர்வோரையும் அறிமுகப்படுத்த முயற்சிப்பது, இந்தியா இதுவரை பயன்படுத்தத் தவறியிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய வாய்ப்பை சுட்டிக்காட்டுகிறது.

உலகின் சிறந்த தேயிலைகளில் இந்திய தேயிலையும் ஒன்று

உலகின் மூன்றாவது பெரிய தேயிலை ஏற்றுமதி நாடாக இந்தியா உள்ளது. நீலகிரி, அசாம் மற்றும் குறிப்பாக டார்ஜிலிங் பகுதிகளில் உலகின் மிகச்சிறந்த தேயிலைகளில் சில உற்பத்தி செய்யப்படுகின்றன.

டார்ஜிலிங்கில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை, புவிசார் குறியீடு (GI) பெற்ற முதல் இந்தியப் பொருளாகும். உயர்தர ‘ஃபர்ஸ்ட் ஃப்ளஷ்’ டார்ஜிலிங் தேயிலை ஒரு கிலோ ரூ.35,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வளவு சிறப்பான பாரம்பரியம் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வந்தாலும், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தனித்துவமான இந்திய தேயிலை பிராண்டை உருவாக்குவதில் நாடு இன்னும் சிரமப்பட்டு வருகிறது.

இந்தியாவின் உயர்தர தேயிலையின் மதிப்பில் பெரும்பகுதி, வரலாற்று ரீதியாக தேயிலை உற்பத்தி செய்யாத நாடுகளில் உள்ள நிறுவனங்களால் விநியோகச் சங்கிலியின் அடுத்தடுத்த கட்டங்களில் பெறப்பட்டுள்ளது.

2024–25ஆம் ஆண்டில், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் அளவின் அடிப்படையில் 81 சதவீதம் இன்னும் மொத்தமாகவே (Bulk) ஏற்றுமதி செய்யப்பட்டது. பாக்கெட்டுகள், தேயிலைப் பைகள் மற்றும் உடனடி தேயிலை போன்ற மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை ஏற்றுமதி அளவில் வெறும் 19 சதவீதமாக இருந்தாலும், ஏற்றுமதி மதிப்பில் 30 சதவீதத்தைப் பெற்றது.

காலனித்துவ காலத்தின் தாக்கம்

இந்த நிலைக்கு வரலாற்றுப் பின்னணியும் ஒரு காரணமாக உள்ளது என இந்தியன் ஸ்கூல் ஆஃப் டீ நிறுவனத்தின் நிறுவனர் சுஸ்மிதா தாஸ் குப்தா கூறுகிறார்.

காலனித்துவ காலத்தில் இந்தியாவின் சிறந்த பாரம்பரிய முழு இலைத் தேயிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே நேரத்தில், CTC எனப்படும் Crush, Tear, Curl முறையில் இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குறைந்த விலை தேயிலை உள்நாட்டு நுகர்வோருக்காக உருவாக்கப்பட்டது.

“தேநீரை எப்படி தயாரிப்பது, எப்படி கொதிக்க வைப்பது, எப்படி சமைப்பது என்பதை ஆங்கிலேயர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்தனர். ஆனால் நல்ல டார்ஜிலிங் தேயிலையை எப்படி ரசித்து குடிப்பது என்பதை அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லை” என்று அவர் கூறுகிறார்.

அதன் பின்னர் இந்தியாவில் தேயிலை, வெகுஜன சந்தைப் பொருள் என்ற பிம்பத்தைத் தாண்ட முடியவில்லை என டார்ஜிலிங்கின் புகழ்பெற்ற மக்கைபாரி தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளரும் லக்ஸ்மி டீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ருத்ரா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

“தேயிலையின் ஆரம்பகால நுகர்வு, ஏற்றுமதி செய்ய முடியாத வகையிலான தேயிலையிலிருந்தே தொடங்கியது. குதிரைவண்டிகள் மற்றும் ரயில் நிலையங்கள் சந்தைப்படுத்தல் பகுதிகளாக மாறின. அப்படித்தான் தேயிலை பிரபலப்படுத்தப்பட்டது” என அவர் கூறினார்.

சிறப்பு தேயிலை சந்தை உருவாகிறது

இந்திய நுகர்வோரின் உயர்தர தேயிலை குறித்த அலட்சியத்தையும் அறியாமையையும் மாற்றுவதற்கு இதைவிடச் சிறந்த காலம் இருக்க முடியாது என தில்ஹான் பெர்னாண்டோ கருதுகிறார்.

மாறிவரும் வருமானம், விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் காரணமாக, உயர்தர தேயிலை ஒரு சிறிய சந்தைப் பிரிவிலிருந்து குறிப்பிடத்தக்க சந்தையாக மாறும் என அவர் எதிர்பார்க்கிறார்.

“தேயிலை ஒரு சாதாரண பொருள் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் உண்மையில் அது ஒரு கைவினைப் பொருள் போன்றது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் அதன் தன்மை மாறுபடும். இயற்கை சார்ந்த ஆரோக்கியம், உணவு மற்றும் பானங்கள் மூலம் நோய்களைத் தடுப்பது போன்ற இளம் தலைமுறையின் விருப்பங்களுடன் இது இணைகிறது. புதிய சுவைகளைத் தேடும் அவர்களின் ஆர்வத்துடனும் இது தொடர்புடையது” என்று அவர் கூறினார்.

இந்தியாவிலும் உலக அளவிலும் சிறப்பு தேயிலை சந்தை தற்போது உருவாகத் தொடங்கியுள்ளது. தனிப்பட்ட தோட்டங்களில் இருந்து பெறப்படும் தேயிலை மற்றும் புதிய அனுபவங்களை வழங்கும் தேயிலைகளுக்கு நுகர்வோர் செலவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

உலகளவில் சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாக மதிப்பிடப்படும் சிறப்பு தேயிலை சந்தை, 2033ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 11 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தில்மாவின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் சிறப்பு தேயிலை சந்தை சுமார் ரூ.870 கோடி மதிப்புடையது. நாட்டில் சுமார் 1,200 பிராண்டட் தேயிலை கஃபேக்கள் மற்றும் கடைகள் உள்ளன. இந்தத் துறை ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்ந்து வருவதாக மதிப்பிடப்படுகிறது.

உயர்தர சந்தையில், மக்கைபாரி நிறுவனம் கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஓட்டலில் அனுபவ மையக் கடையைத் திறந்துள்ளது. சாஞ்சா (Sancha) நிறுவனம் ஏழு நகரங்களில் 15 தேயிலை விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது.

தேநீரை ஒரு அனுபவமாக மாற்றும் முயற்சி

“கலாச்சார வேர்களைக் கொண்ட உணவு மற்றும் பானங்களுக்கு உலக அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது” என்று ருத்ரா சட்டர்ஜி கூறுகிறார்.

கொரோனா காலத்திற்குப் பிறகு, ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இயற்கை பானங்களில் நுகர்வோரின் ஆர்வம் அதிகரித்துள்ளது என்றும், மதுபானம் இல்லாமலேயே சமூக அனுபவத்தை வழங்கக்கூடிய பானங்களுக்கான விருப்பம் உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வளர்ந்து வரும் ஆர்வத்தை விரிவான உயர்தர தேயிலை வணிகமாக மாற்ற தில்மா முயற்சி செய்து வருகிறது.

தம்பபன்னியின் பிரமிட் வடிவ தேயிலைப் பைகளில் ‘காஷ்மீரி கஹ்வா’ உள்ளிட்ட பல்வேறு சுவைகள் இடம்பெற்றுள்ளன. அதன் உயர்தர Loose Leaf தொகுப்பில் சிறப்பு தேயிலைகள், மூலிகை கலவைகள் மற்றும் பிளாக் டீ வகைகள் இடம்பெற்றுள்ளன.

தேநீரை வெறும் பானமாக மட்டும் விற்பனை செய்யாமல், உணவுடன் இணைத்து வழங்குதல், தேயிலை சார்ந்த உணவு அனுபவம் மற்றும் மதுபானம் இல்லாத பானங்கள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதே நோக்கம் என பெர்னாண்டோ கூறுகிறார்.

டார்ஜிலிங் குளிரூட்டப்பட்ட தேயிலை கலவையை ஷாம்பெயின் கண்ணாடியில் வழங்குவது அல்லது ஒரு குறிப்பிட்ட தம்பபன்னி தேயிலையை சீஸ் அல்லது இனிப்புடன் இணைத்து வழங்குவது போன்ற அனுபவங்களை அவர் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

“வாடிக்கையாளர்கள் தேநீருக்காக மட்டும் பணம் செலுத்த மாட்டார்கள்; ஒரு அனுபவத்திற்காக பணம் செலுத்துவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் தில்மா

தில்மாவின் கவனம் உயர்தர ஓட்டல்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இ-காமர்ஸ் மற்றும் விரைவு வர்த்தக (Quick Commerce) தளங்கள் மூலமாகவும் விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பின்னர் ‘Urban Estate’ என்ற தேயிலை அரங்குகளை தனித்தனி விற்பனை நிலையங்களாகவும், ஓட்டல்களுடன் இணைந்தும் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூரில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய உற்பத்தி ஆலையை மீண்டும் செயல்படுத்த தில்மா நடவடிக்கை எடுத்து வருகிறது.

அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இந்தியாவில் 15 முதல் 25 மில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை முக்கியமாக ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்படும்.

எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்

இந்தியர்களை தேநீரை ஒரு உயர்தர அனுபவமாகக் கருதச் செய்வதில் தில்மா மட்டும் முயற்சி செய்யவில்லை.

ஒரு தசாப்தத்துக்கு முன்பே இந்தியாவில் சில்லறை விற்பனைத் துறையில் நுழைய தில்மா முயன்றது. ஆனால் அதிக சில்லறை விற்பனை லாப வரம்புகள் மற்றும் நுகர்வோரின் விலை எதிர்பார்ப்புகள் காரணமாக அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கியது.

சிங்கப்பூரைச் சேர்ந்த TWG, Tata 1868 மற்றும் இந்தியாவின் Teabox போன்ற பல நிறுவனங்களும் சிறப்பு தேயிலை சந்தையில் முயற்சி செய்துள்ளன. ஆனால் காபிக்கு ஏற்பட்டுள்ள நிலையான ஈர்ப்பைப் போல சிறப்பு தேயிலைக்கு இந்திய நுகர்வோரிடம் தொடர்ந்து ஆர்வத்தை உருவாக்க எந்த நிறுவனமும் இதுவரை முழுமையாக வெற்றி பெறவில்லை.

உலக அளவில் 550 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாயை தில்மா ஈட்டுவதாக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன் உலகளாவிய வணிகத்தில் 40 சதவீதம் உயர்தர விருந்தோம்பல் துறையிலிருந்து கிடைக்கிறது. முக்கிய விமான நிறுவனங்கள் மற்றும் ஆடம்பர ஓட்டல்கள் அதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.

2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தில்மாவின் ‘School of Tea’ மூலம் ஆயிரக்கணக்கான விருந்தோம்பல் துறை ஊழியர்களுக்கு தேநீர் தயாரித்தல், பரிமாறுதல், உணவுடன் தேநீரை இணைத்தல் மற்றும் தேநீர் கலவை தயாரித்தல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவின் ஆடம்பர ஓட்டல்களின் நிலை வேறுபட்டதாக இருப்பதாக சுஸ்மிதா தாஸ் குப்தா கூறுகிறார்.

“பல இந்திய ஓட்டல்கள் இன்னும் அறைகளில் வைக்க ரூ.1 மதிப்புள்ள தேயிலைப் பையையே விரும்புகின்றன. தீவிரமான தேயிலை திட்டத்தை உருவாக்க முன்வந்த ஓட்டல்கள் மிகவும் குறைவு” என அவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோரின் தேயிலை அறிவும் ஒரு சவால்

நுகர்வோருக்கு தேயிலை குறித்த அறிவு இல்லாததும் மற்றொரு பெரிய தடையாக உள்ளது.

“டார்ஜிலிங் என்றால் என்ன என்பதே பலருக்குத் தெரியவில்லை. டார்ஜிலிங் என்பது நேபாளத்தில் உள்ள ஒரு தேயிலைப் பண்ணை என்று கூட பலர் நினைக்கிறார்கள்” என சுஸ்மிதா தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உயர்தர தேயிலைகளை பிரபலப்படுத்துவதில் தேயிலை உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கும் பங்கு இருப்பதாக ருத்ரா சட்டர்ஜி கூறுகிறார்.

“ஆனால் இங்குள்ள உற்பத்தியாளர்கள் ஏதோ ஒரு காரணத்தால் சில்லறை விற்பனையாளர்களாக மாற விரும்புவதில்லை. நாங்கள் சிறந்த உற்பத்தியாளர்களாக மாறுவதற்குக்கூட நுகர்வோருடன் நேரடியாகப் பேசுவது முக்கியம்” என அவர் கூறினார்.

“டார்ஜிலிங் பகுதி லூயி விட்டான் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்திருந்தால், அந்த நிறுவனம் அதை எப்படி உலக அளவில் பயன்படுத்தியிருக்கும் என்று சில நேரங்களில் நான் ஆச்சரியப்படுகிறேன்” என்றும் ருத்ரா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.