காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைக்கு அனுப்பப்பட்ட தரமற்ற வெங்காயம் தொடர்பான விவகாரத்தில், ஒரு ரேஷன் கடைப் பணியாளர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் நளை காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் மாபெரும் கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பா.தினேஷ்குமார் விடுத்துள்ள கூட்டறிக்கை:
ஒரு பணியாளருக்கு ஏற்பட்ட அநீதி, ஒட்டுமொத்தப் பணியாளர்களின் உரிமைப் போராட்டம்" என்ற முழக்கத்தின் அடிப்படையில், தரமற்ற வெங்காய விவகாரத்தில் உண்மையான காரணத்தை ஆராயாமல் பணியாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயம்? என்று சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் நேரில் சந்தித்து நியாயம் கேட்டும், இதுவரை பணிநீக்க ஆணை ரத்து செய்யப்படவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, நியாயமின்றிப் பணியாளர் தண்டிக்கப்படுவதை ஏற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள் முன்பு பதவிகள் மற்றும் மாவட்ட வேறுபாடுகளைக் கடந்து, ரேஷன் கடை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், மகளிர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகளும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்று கடையடைப்பை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



