தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறையை முழுமையாக நவீனமாக்கவும், எளிமைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தலைமுறை ஆன்லைன் மென்பொருள் திட்டம்தான்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 22.01.2026 அன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத்துறையின் STAR 3.0 மென்பொருள் திட்டத்தின் கீழ் Sprint 1 என்ற 18 தொழில்நுட்ப சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டத்தை தொடங்கி வைத்தார். இது காகிதமில்லா பதிவு, நேரடி வருகையில்லா பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட சேவைகளை உள்ளடக்கியது.

2000-ல் STAR திட்டம், 2018-ல் STAR 2.0 திட்டம் வந்த நிலையில், தற்போது STAR 2.0 ஒப்பந்த காலம் முடிந்ததை அடுத்து STAR 3.0 அறிமுகமாகியுள்ளது. இத்திட்டம் ஆகஸ்ட் 17, 2026 முதல் தமிழகம் முழுவதும் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது.

காகிதமில்லா பத்திரப்பதிவு முதல் முறையாக அனைத்து 30 வகையான பத்திரங்களுக்கும் காகிதமில்லா பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களை பிசிக்கலாக கொண்டு செல்ல வேண்டியதில்லை.

நேரடி வருகையில்லா பதிவு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளின் முதல் விற்பனை பத்திரங்கள், வங்கிக் கடன் ஆவணங்கள் உள்ளிட்ட 10 வகை பத்திரங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்யலாம். பணம் டிஜிட்டலாக செலுத்திய பின், ஆவணம் அதே நாளில் பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கப்படும்.

ஆன்லைன் ஆவணத் தயாரிப்பு - தானியங்கி பத்திர உருவாக்கம்: இனி பத்திரங்களை தனியாக எழுதி வாங்க வேண்டியதில்லை. பொதுமக்களே கேள்வி-பதில் வடிவில் 4 படிகளில் தங்கள் பத்திரத்தின் வரைவை (Draft) ஆன்லைனிலேயே தட்டச்சு செய்து தயாரிக்கலாம். இதனால் ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை.

ஆதார் மூலம் மின்-கையொப்பம்: ஆவணம் தயாரானதும், சொத்தை எழுதிக் கொடுப்பவர், பெறுபவர் மற்றும் சாட்சிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு வரும் OTP அல்லது கைரேகை / கருவிழி (Iris) அங்கீகாரம் மூலம் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடலாம். இது அடையாள சரிபார்ப்பை உறுதி செய்கிறது.

1 மணி நேரத்தில் அசல் பத்திரம்: சார்பதிவாளர் சரிபார்ப்புக்குப் பிறகு பதிவு முடிந்ததும் 60 நிமிடங்களுக்குள் அசல் பத்திரம் திரும்ப வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாட்கள் வரை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்யலாம்.

QR Code வழி கட்டணம்: பதிவுக் கட்டணத்தை QR Code மற்றும் UPI மூலம் செலுத்தும் வசதி, 1000 ரூபாய்க்கு குறைவான தொகைக்கு POS QR வசதி என கேஷ்லெஸ் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

வில்லங்கச் சான்று (EC) தேடல் எளிமை: ஒரே பதிவு எண்ணை வைத்து அதனுடன் தொடர்புடைய முந்தைய மற்றும் பிந்தைய ஆவணங்களை தேடும் வசதி, வருவாய் மாவட்டம், தாலுகா, கிராமம் வாரியாக தேடும் வசதி அறிமுகம்.

TNREGINET செயலி மற்றும் WhatsApp தகவல்: பொதுமக்கள் பதிவு நிலை, வழிகாட்டி மதிப்பு, திருமண பதிவு டோக்கன் உள்ளிட்டவற்றை TNREGINET மொபைல் செயலி மற்றும் WhatsApp மூலம் நேரடியாக பெறலாம்.

பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் அவர்களின் சுற்றறிக்கைப்படி, STAR 3.0 திட்டத்தில் அடுத்த முக்கிய கட்டமாக குடும்ப சொத்து தொடர்பான 4 வகை பத்திரங்களுக்கு காகிதமில்லா பதிவு முறை நவம்பர் 2, 2026 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செட்டில்மெண்ட் பத்திரம் விடுதலைப் பத்திரம் பாகப்பிரிவினை பத்திரம் செட்டில்மெண்ட் ரத்து பத்திரம்

இதன் புதிய நடைமுறை எப்படி பொதுமக்கள் பத்திரத்தை தனியாக தயாரித்து பதிவேற்ற தேவையில்லை. ஆன்லைனில் ஆவண விவரங்களை பதிவிட்டு, மூல ஆவணங்கள் மற்றும் துணை ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். பின்னர் டோக்கன் பெற்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ஆதார் சரிபார்ப்பு மட்டும் செய்தால் போதும்.

இடைத்தரகர்கள் இல்லாமல் பொதுமக்கள் நேரடியாக பதிவு செய்வதால், லஞ்சம், தாமதம் குறையும், அரசுக்கு வருவாய் இழப்பு தடுக்கப்படும். சொத்து வாங்குவோர், விற்போர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அலைய வேண்டிய நிலை பெருமளவு குறையும் என்பதே அரசின் நோக்கம்.

புதிய வசதிகள் ஒருபக்கம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பல மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான சர்வே எண்கள் TNREGINET இணையதளத்தில் இடம்பெறாததால் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வருவாய்த்துறை ஆவணங்களை இணைக்கும் பணியில் சில எண்கள் விடுபட்டதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்து, விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்: சங்கர்