அதிகாலையில் பள்ளிச் சீருடையை அணிவித்து, புத்தகப் பையை முதுகில் மாட்டி, நெற்றியில் பொட்டிட்டு தன் அன்பு மகளை வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கும் ஒவ்வொரு தாயின் கண்களிலும் ஆயிரம் கனவுகள் இருக்கும். தன் பிள்ளை படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும், இந்தச் சமூகத்தில் தைரியமாகத் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற அந்தத் தாயின் எதிர்பார்ப்புதான் அந்த நாளின் தொடக்கமாக இருக்கும். ஆனால், மாலையில் பள்ளி மணி அடித்து குழந்தைகள் வெளியே வரும் நேரம் வரை, இன்றைய தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு பெற்றோரின் நெஞ்சமும் ஒரு நிமிடத்திற்கு நூறு முறைக் கதறித் துடிக்கிறது. என் பிள்ளை பத்திரமாக வீடு வந்து சேருமா என்ற இந்த ஒற்றைக் கேள்விதான் இன்று ஒட்டுமொத்த தமிழகப் பெற்றோர்களின் நிம்மதியைக் குலைத்து, அவர்களின் ஒவ்வொரு பகலையும் இரவையும் நரகமாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் வெவ்வேறு மூலைகளில் இருந்து வந்து சேரும் செய்திகள் எளிய மக்களின் நெஞ்சில் ரத்தக் கண்ணீரை வரவழைக்கின்றன. பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் பச்சிளம் சிறுமிகளும், மழலை மாறாத இளம் பெண்களும் அடுத்தடுத்துக் காணாமல் போவதும், கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுத் தொலைந்து போவதும் மனிதநேயம் மரத்துவிட்டதோ என்ற பேரச்சத்தை ஏற்படுத்துகிறது. விடியற்காலையில் வீட்டைவிட்டுப் புறப்படும் பிஞ்சுகள், மாலையில் பிணமாகவோ அல்லது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாமலோ மாயமாவது எந்தத் தாயின் மனதைக் தாங்கிக் கொள்ள முடியும் திண்டிவனம், செஞ்சி மற்றும் பல ஊர்களில் அடுத்தடுத்து குழந்தைகள் காணாமல் போகும் சோகங்கள், இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒருவித பயங்கரமான அமைதியையும் பதற்றத்தையும் விதைத்துள்ளன. ஸ்கூல் வேன் சத்தம் கேட்டாலே பதறி அடித்து வாசல் படியைத் தாண்டி ஓடிவந்து குழந்தையைப் பார்க்கும் பெற்றோர்களின் தவிப்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
இத்தகைய கோரச் செயல்கள் ஏதோ தனிநபர்களின் வெறிச்செயலாக மட்டும் சுருங்கிவிடவில்லை என்பதுதான் இப்போதைய பலத்த சந்தேகமாகவும், அச்சமாகவும் உள்ளது. இதற்குப் பின்னால் ஏதோ ஒரு பலமான, கண்ணுக்குத் தெரியாத நிழல் உலக வலைப்பின்னல் செயல்பட்டு வருவதாகப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பகிரங்கமாக அஞ்சுகின்றனர். சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சிறுமிகள் வன்கொடுமை வழக்கில் வீரமணி போன்ற ஒருசிலர் கைது செய்யப்பட்டதோடு காவல்துறை தன் கடமை முடிந்துவிட்டதாகத் தட்டிக்கழிக்கப் பார்க்கிறது. ஆனால், அந்த வீரமணி மட்டும் தனியாக இவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றினாரா அல்லது அவருக்குப் பின்னால் இன்னும் பல தலைகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. கைது செய்யப்பட்ட குற்றவாளி எதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டான், அவனுக்கு உறுதுணையாக இருந்த பின்னணி சக்திகள் யார், அவனுக்கு எங்கிருந்து பலம் கிடைத்தது என்பது குறித்த எந்தவொரு உண்மையும் வெளிச்சத்திற்கு வராமல் மூடி மறைக்கப்படுவதே சட்டம்-ஒழுந்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைத் தன் நேரடிப் பார்வையின் கீழ் வைத்துள்ள முதல்வரின் நிர்வாகத்தின் கீழ் இன்று காவல்துறையின் பிடி தளர்ந்து போயிருக்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. காவல் துறையினரிடம் புகார் அளித்தாலும், வழக்கமான ஏட்டுப் பூர்வமான விசாரணைகளோடு தேடுதல் வேட்டை முடங்கிப் போய்விடுவதால், பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை மீட்க முடியாமல் தவித்து நிற்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளும், நாளிதழ்களில் வரும் தொடர் செய்திகளும் தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போகும் புள்ளிவிவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. பள்ளிகளின் சுற்றுப்புறப் பகுதிகளில் போதிய பாதுகாப்பற்ற தன்மையும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகச் சீர்கேடும் இந்த விபரீதத்திற்குக் காரணமாக அமைகின்றன.
ஒரு குற்றவாளி சிக்கயவுடன் இந்தச் சமூகம் அமைதியாகிவிட முடியாது. ஏனென்றால், பாதிக்கப்பட்ட பிஞ்சுகளுக்கு நீதி கிடைப்பதும், குற்றத்தின் வேர்களை முழுமையாக வெட்டி வீழ்த்துவதும் அரசாங்கத்தின் கடமையாகும். காவல்துறையின் புலனாய்வுத் துறை வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், காணாமல் போன அத்தனை குழந்தைகளையும் உயிருடன் மீட்கப் போர்க்கால அடிப்படையில் தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்க வேண்டும். எத்தனை பெரிய பலமிக்க நபர்கள் இதன் பின்னணியில் இருந்தாலும், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தரும் துணிச்சலை அரசு காட்ட வேண்டும்.
அதிகாரப் போட்டிகளிலும், விளம்பர மோகங்களிலும் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள், அடிமட்ட மக்களின் பாதுகாப்பில் குறிப்பாகப் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும். சட்டம்-ஒழுங்கு என்பது வெறும் காகிதங்களில் எழுதப்பட்ட வார்த்தைகளாக இல்லாமல், தெருக்களில் நடமாடும் எளிய மக்களுக்கும், பள்ளிச் சிறுமிகளுக்கும் பாதுகாப்புத் கவசமாக மாற வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அச்சமின்றிப் பள்ளிக்கு அனுப்பும் இயல்பான சூழல் எப்போது திரும்பப் பெறப்படுகிறதோ, அதுவே இந்த அரசுக்கான உண்மையான சான்றிதழாக இருக்க முடியும் என்பதை விருதை சத்தியம் ஊடகம் எச்சரிக்கையாகப் பதிவு செய்கிறது.



