கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி நடைபெற்ற சாலை மறியல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். கடலூர் புதுநகர் காவல்நிலைய குற்ற எண் 92/2025-ன் கீழ், பாரதிய நியாய சம்ஹிதா (BNS) பிரிவுகள் 189(2), 126(2) மற்றும் 293-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பிஜேபி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
வால்ஜாபேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை எரித்ததை கண்டித்து, மஞ்சக்குப்பம் தலைமை தபால்நிலையம் கார் ஸ்டேண்ட் அருகே முன் அனுமதியின்றி ஒன்றுகூடி சாலை மறியல் செய்ததாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியது.
அப்போது காவல்துறையின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இன்று கடலூர் நீதிமன்றத்தில் அனைவரும் ஆஜரானார்கள். ஆனால், நீதிபதி விடுப்பில் இருந்ததால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அனைவரும் திரும்பிச் சென்றனர்.


