கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாமக நகர நிர்வாகி சுரேஷ் (42) வீட்டில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயிண்டர் தொழிலில் ஈடுபட்டுள்ள சுரேஷ், தனது மனைவி சுதா மற்றும் பிள்ளைகளுடன் காந்திநகரில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள ஒன்றரை சென்ட் நிலத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி கிரயம் செய்து வாங்கியிருந்தார்.

இந்த நில வாங்குதல் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தவெக விருத்தாசலம் நகர பொருளாளர் ராஜ்குமாருக்கும் சுரேஷுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. “தன்னை மீறி இந்த இடத்தை எப்படி நீ வாங்கலாம்?” எனக் கூறி ராஜ்குமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுரேஷ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுரேஷுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்ற தீர்ப்பால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் வந்து சுரேஷை சரமாரியாகத் தாக்கியதாக தகவல். ஆனால் ராஜ்குமார் தரப்பு, சுரேஷ் தன்னை கத்தியால் தாக்கியதாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுரேஷ் சிறையில் இருக்கும் நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சுரேஷின் வீட்டின் முன்பக்கமும் பின்பக்கமும் இரண்டு பெட்ரோல் குண்டுகளை சரமாரி வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். குண்டு வெடித்த சத்தத்தால் அதிர்ச்சியடைந்த சுதா, உடனடியாக விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

வந்த போலீசார், சிதறிக்கிடந்த பெட்ரோல் குண்டு பாட்டில்களின் துகள்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சுதாவிடம் சம்பவத்தைக் கேட்டறிந்து புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சுரேஷின் மனைவி சுதா கண்ணீர் மல்கக் கூறுகையில், “எங்கள் இடத்தை அபகரிக்க நினைத்து தொடர்ந்து மிரட்டி வந்த தவெக நகர பொருளாளர் ராஜ்குமார்தான் எனது கணவர் மீது பொய் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பினார். தற்போது நாங்கள் அனாதையாக வீட்டில் இருக்கும்போது பெட்ரோல் குண்டு வீசி எங்களை உயிரோடு எரிக்கப் பார்க்கிறார்கள். நானும் தவெகவில்தான் இருந்து வருகிறேன். விஜய் அண்ணனை நம்பிதான் நாங்கள் எல்லோரும் ஓட்டுப்போட்டோம். கட்சிக்காக உழைத்தோம். ஆனால் அவரது கட்சியின் நகரப் பொறுப்பில் இருக்கும் ராஜ்குமாரே இப்படி அராஜகம் செய்கிறார். எங்கள் உயிருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பாமக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.