கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல்கவரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து, போலி குறுஞ்செய்தி இணைப்பு மூலம் ரூ.23,280 நூதன முறையில் எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25-ம் தேதி காலை, அவரது கைபேசிக்கு உங்கள் வாகனத்துக்கு மின்னணு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, விவரம் அறிய இந்த இணைப்பை அழுத்தவும் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவரது வாகனப் பதிவு எண் சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், அது போக்குவரத்துத் துறையின் உண்மையான அறிவிப்பு போலவே தோற்றமளித்துள்ளது. ஆனால் அந்தச் செய்தி அரசுத் துறை அனுப்பும் முறையில் இல்லாமல், சாதாரண 10 இலக்க கைபேசி எண்ணிலிருந்து வந்திருந்தது.
இந்நிலையில், இன்று (26 ம் தேதி) மாலை 5.44 மணிக்கு, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.23,280 யுபிஐ மூலம் வேறொரு நபரின் கணக்குக்கு அனுப்பப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. கணக்கில் வெறும் ரூ.9.61 மட்டுமே மீதம் இருந்தது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் யாரிடமும் ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) எண்ணையோ, ரகசிய எண்ணையோ தெரிவிக்கவில்லை. இருப்பினும், மோசடி நபர்கள் அவரது வங்கிக் கணக்கை வேறொரு கைபேசியில் இணைத்து, புதிய யுபிஐ முகவரியை உருவாக்கி பணத்தை எடுத்துள்ளனர். பணம் எடுக்கப்பட்ட பிறகும், அவரது பற்று அட்டைக்கான (டெபிட் கார்டு) ஓடிபி எண்ணும், கைபேசி வங்கிச் சேவையைச் செயல்படுத்தும் கோரிக்கையும் அடுத்தடுத்து வந்துள்ளன. மோசடி நபர்கள் தொடர்ந்து முயற்சி செய்தது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
மோசடி நடப்பது எப்படி
இதுபோன்ற போலி இணைப்பை அழுத்தினால், போக்குவரத்து அபராதம் என்ற பெயரில் ஒரு செயலி கைபேசியில் பதிவிறக்கம் ஆகிறது. அதை நிறுவியவுடன், கைபேசிக்கு வரும் ஓடிபி உள்ளிட்ட அனைத்துக் குறுஞ்செய்திகளையும் அந்தச் செயலி ரகசியமாகப் படித்து மோசடி நபர்களுக்கு அனுப்பிவிடுகிறது. இதனால், உரிமையாளருக்குத் தெரியாமலேயே கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது என இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கவனத்துக்கு
வாகன அபராதத்தை மத்திய அரசின் பரிவாகன்அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே சரிபார்க்கவும். குறுஞ்செய்தியில் வரும் இணைப்புகளை நம்ப வேண்டாம். வாகன அபராதம், மின்கட்டண நிலுவை, வங்கி விவரப் புதுப்பிப்பு, பரிசுத் தொகை என வரும் எந்த இணைப்பையும் தொட வேண்டாம். கூகுள் பிளே ஸ்டோர் தவிர, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் செயலிகளை நிறுவ வேண்டாம். பணம் பறிபோனால் உடனடியாக 1930என்ற இணையக் குற்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். முதல் சில மணி நேரங்களுக்குள் புகார் அளித்தால், பணத்தை முடக்கி மீட்க வாய்ப்பு அதிகம். மத்திய அரசின் தேசிய இணையக் குற்றப் புகார் இணையதளத்திலும்** புகார் பதிவு செய்யலாம். உடனே வங்கியைத் தொடர்பு கொண்டு யுபிஐ, பற்று அட்டை, கைபேசி வங்கிச் சேவைகளை முடக்க வேண்டும்.


