கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே வேடப்பர் கோயில் பகுதியில் போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில், சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சந்துரு மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு மற்றும் போலீசார் வேடப்பர் கோயில் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காருக்குள் மூன்று மூட்டைகளில் 40 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் இருந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜாலாராம் மகன் திலீப்சிங் (28), கண்டிலால் மகன் சர்வன்சிங் (22) என்பது தெரியவந்தது.
மேலும், ஜெயங்கொண்டம் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்துவிட்டு கிடைத்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கப் பணத்துடன், மீதமிருந்த குட்கா மூட்டைகளை விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், மூன்று செல்போன்கள், 40 கிலோ குட்கா மற்றும் ரூ.1.25 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையைத் தடுக்க போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி பறிமுதல் நடைபெற்றுள்ளது.



