தமிழ்நாட்டில் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் பள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு நாட்கள் விடுமுறை என்பது பல தலைமுறைகளாகத் தொடரும் ஒரு ஆரோக்கியமான நடைமுறையாகும். கல்வி என்பது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்காக மட்டுமே தவிர, அவர்களின் ஒட்டுமொத்த இளமையையும் முடக்குவதற்காக அல்ல. ஆனால்
இன்றைய காலகட்டத்தில் வணிக நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் பல தனியார் பள்ளிகள், இந்த அடிப்படை ஒழுங்குமுறைகளைக் காலில் போட்டு மிதித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள், LKG மற்றும் UKG போன்ற மழலையர் வகுப்புகளுக்குக் கூட சனிக்கிழமை முழு நாளும் வகுப்புகளை நடத்துவது
ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் செயலாகும். எழுத்துக்கூட்டிப் பேசத் தெரியாத பிஞ்சுப் பருவக் குழந்தைகளிடம் புத்தகச் சுமையைத் திணிக்கும் இந்த அநாகரிகப் போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது.
குழந்தைகளுக்கான கல்வி என்பது அவர்களின் உடல் மற்றும் உளவியல் நல்வாழ்வோடு நேரடியானது. வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளி மற்றும் இரண்டு நாட்கள் விடுமுறை என்ற முறை சும்மா தற்செயலாக உருவாக்கப்பட்டது அல்ல; அது குழந்தைகளின் மூளைவளத்தைப் பேணவும், அவர்களுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்கவும் உளவியலாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட முறையாகும். தொடர்ச்சியாகப் பள்ளிக்குச் செல்வதும், வீட்டுப்பாடங்களின் சுமையால் அவதிப்படுவதும் இளம் குழந்தைகளின் மூளையில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வார இறுதி நாட்களில் கிடைக்கும் இரண்டு நாள் விடுமுறை, அந்தச் சிறிய மூளை செல்களை ஆசுவாசப்படுத்தி, அடுத்த வாரக் கற்றலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். இதை விடுத்து, வாரத்தின் ஆறு நாட்களும் பள்ளிக்கூடம் என்று குழந்தைகளை வதைப்பது அவர்களின் இயற்கையான படைப்பாற்றலையும் புன்னகையையும் முற்றிலுமாக அழித்துவிடும். இதுமட்டுமின்றி குழந்தைகளின் கல்விச் சுமை குடும்ப உறவுகளின் பிணைப்பையும் கடுமையாகப் பாதிக்கிறது. நவீன காலச் சூழலில் பெற்றோர்கள் தங்களின் வேலைப் பளுவிற்கிடையே தவித்தாலும், வார இறுதி நாட்கள் மட்டுமே குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசவும், விளையாடவும், குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடவும் உள்ள ஒரே பொன்னான வாய்ப்பாகும். சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்குவதால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவுப் பாலம் அறுபட்டு, குடும்ப ஒற்றுமையே கேள்விக்குறியாகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் கிடைக்கும் விடுமுறையும் ஓய்வுக்கே சரியாகப் போய்விடுவதால், குடும்பத்தில் எந்தவிதமான மகிழ்ச்சியான தருணங்களும் நிகழ்வதில்லை. பள்ளிக்கூடங்களும் வீடுகளும்
குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள் போல மாறுவது எந்த விதத்தில் நியாயம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ போன்ற பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்களின் எதிர்காலம் கருதிச் சிறப்பு வகுப்புகள் நடத்துவது ஓரளவுக்குப் புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால், இன்னும் மழலையின் வாசம் மாறாத எல்கேஜி மற்றும் யுகேஜி குழந்தைகளுக்கு வாரத்தில் ஆறு நாட்களும் பள்ளிக்கூடம் வைப்பது எந்த விதமான கல்விக் கோட்பாட்டின் கீழ் வருகிறது கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் சில, மழலையர் கல்வி என்ற பெயரில் நடத்தும் இந்த வணிகக் கொள்ளை கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
குழந்தைகளிடம் மிரட்டிப் பணம் பறிக்கும் இந்தத் தரமற்ற செயல்களைத் தட்டிக்க கேட்க வேண்டிய கல்வித்துறை மெளனமாக வேடிக்க பார்ப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதல்களும், தமிழ்நாடு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் கல்விச் சட்ட விதிமுறைகளும் பொதுவானவை ஆகும். ஒரு கல்வி ஆண்டில் பள்ளிகள் எத்தனை நாட்கள் இயங்க வேண்டும் என்பது குறித்துக் கல்வித்துறை ஆண்டுதோறும் பள்ளி நாட்காட்டி வெளியிடுகிறது. இதன் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே முழுமையாக இயங்குகின்றன. ஆனால், தனியார் பள்ளிகள் தங்களின் பாடத்திட்டத்தைச் சீக்கிரம் முடிப்பதாகக் கூறிக்கொண்டு, சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்குகின்றன.
சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு எங்கும் பிரத்யேகமாக உத்தரவிடவில்லை அல்லது அனுமதி அளிக்கவில்லை. அப்படியிருக்க, தனியார் பள்ளிகள் தாங்களாகவே முன்வந்து விடுமுறை நாட்களைப் பறித்து வகுப்புகளை நடத்துவது தமிழக அரசின் கல்வி விதிகளுக்கு நேரடி எதிரானது அல்லவா? இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும். தனியார் பள்ளிகள் தாறுமாறாகச் சனிக்கிழமை வகுப்புகளை நடத்துவதைத் தடுக்கவும், குறிப்பாக மழலையர் வகுப்புகளுக்குச் சனிக்கிழமை பள்ளி நடத்துவதை முழுமையாகத் தடை செய்யவும் தமிழக அரசு கடுமையான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்
ஆய்வாளர்கள் இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது எத்தகைய தயவுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றவும், அவர்களின் இளமைக் பருவத்தை மகிழ்ச்சியானதாக மாற்றவும், கல்வி வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசாங்கம் உடனடி ஆணையிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.



