விஜயதசமி கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழ்நாடு முழுவதும் நடத்தவுள்ள வழித்தடப் பேரணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. நீதிபதி வி. லட்சுமிநாராயணன் பிறப்பித்த உத்தரவில், அக்டோபர் 25 அன்று வட மாவட்டங்களிலும், நவம்பர் 1 அன்று தென் மாவட்டங்களிலும் மொத்தம் 128 இடங்களில் பேரணிகளும் அதைத் தொடர்ந்த பொதுக்கூட்டங்களும் நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். வட தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வி.ஜி. ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவில், அமைப்பின் நிறுவன நாளான விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 18, 25 அல்லது நவம்பர் 1 ஆகிய தேதிகளில் சீருடை அணிந்து வழித்தடப் பேரணி நடத்தி, அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. அக்டோபர் 3 அன்று மாநில காவல் தலைமை இயக்குநரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டும் பதில் கிடைக்காததால் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

காவல்துறை, வழித்தடங்களில் மசூதிகள் தேவாலயங்கள் இருப்பது, பகுத்தறிவுச் சிந்தனையாளர்களின் சிலைகள், போக்குவரத்து நெரிசல், ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் போன்ற காரணங்களைக் காட்டி அனுமதி மறுத்திருந்தது. சில இடங்களில் மட்டும் அனுமதி தரத் தயாராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இந்த அணுகுமுறையைக் கடுமையாகக் கண்டித்தார். காவல்துறை எந்தப் புதிய காரணங்களையும் சொல்லவில்லை. ஏற்கனவே இந்த நீதிமன்றம் நிராகரித்த பழைய காரணங்களையே மீண்டும் மீண்டும் கூறிவருகிறது என்று நீதிபதி தெரிவித்தார். முன்னதாக நடந்த விசாரணையில், மசூதிகள் மற்றும் ஈத்காக்களைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பது முஸ்லிம் சமூகத்தை மோசமாகச் சித்தரிப்பதாகவும், ரம்ஜான் அக்டோபரில் வர்கள் ரம்ஜான் கொண்டாடுவார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

பொதுச் சாலைகள் அனைவருக்கும் பொதுவானவை. மதம், சாதி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிமை உண்டு. காவல்துறை குடிமக்களை எதிரிகளாகப் பார்க்கும் அணுகுமுறை தவறானது.ஜம்மு-காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில்கூட ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் 128 இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து நேரம், வழித்தடங்கள், பொதுக்கூட்ட இடங்களை அக்டோபர் 19க்குள் இறுதி செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தரப்பு ஏற்கனவே நீதிமன்றம் விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் கடைப்பிடிப்பதாக உறுதியளித்துள்ளது. பேரணி தொடர்பான முழு விவரங்கள் நீதிமன்ற உத்தரவுடன் இணைக்கப்படும். உள்ளூர் காவல் அதிகாரிகள் நிலவரத்திற்கு ஏற்ப சிறிய மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். ஆனால் அனுமதியைத் தாமதப்படுத்தக் கூடாது.

காவல்துறை விண்ணப்பங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். குறைகளைத் தேடி நிராகரிக்கும் போக்கை மாற்ற வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்களும் விண்ணப்பங்களை போதிய கால அவகாசத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

இந்த உத்தரவு, விஜயதசமி கொண்டாட்டங்களை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடும் நிலைமை தொடர்வதை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாகும். தமிழகத்தில் இதுபோன்ற வழக்குகள் 2022 முதல் தொடர்ந்து வருவதால், நீதிமன்றம் முன்னதாக விரிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருந்தது. அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து அமைதியாகப் பேரணி நடத்த இரு தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு.