தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த தனியார் பேருந்துகளின் கவன ஈர்ப்பு ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் கு.தங்கராஜ் வெளியிட்டுள்ள கடிதத்தில்,
"அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் நேற்று நடைபெற்ற எங்களது பேட்டி மற்றும் கோரிக்கைகளை பொது மக்களுக்கு கொண்டு சென்றமைக்கு மனமார்ந்த நன்றி. தமிழக அரசின் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தொடர்பு கொண்டு எங்களது முக்கிய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்த வகையில், நாளை நாங்கள் அறிவித்துள்ள கவன ஈர்ப்பு ஒரு நாள் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பது என்று முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனியார் பேருந்துகளில் மகளிரை கட்டணமின்றி அனுமதித்ததற்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



