தென்காசி மாவட்டம் பண்பொழி -தென்காசி சாலையில் உள்ள விவசாய தோட்டத்தில் கடந்த 10-ம் தேதி தலையில் பலத்த காயத்துடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. போலீசார் விசாரணையில் இறந்தவர் தென்காசி தைக்கா தெருவைச் சேர்ந்த ரோலிங் ஷட்டர் தொழிலாளி தவ்ஹீத் அப்துல் ரஹ்மான் (50) என்பது தெரியவந்தது.
விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. தவ்ஹீத்தின் இரண்டாவது மனைவி ஹம்சா (36) என்பவருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹோட்டல் ஊழியராக வேலை பார்க்கும் இசை இந்திரகுமார் (36) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சமீபகாலமாக கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.
பம்புசெட் கட்டிடத்திற்கு ஷட்டர் அளவு எடுக்க வேண்டும் என கூறி வாடகை காரில் அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் இந்திரகுமார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலையால் 8 குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இறந்த தவ்ஹீத்தின் முதல் மனைவிக்கு 2 குழந்தைகள், இரண்டாவது மனைவி ஹம்சாவுக்கு 2 குழந்தைகள், ஹம்சாவின் முதல் கணவருக்கு 2 குழந்தைகள், கள்ளக்காதலன் இந்திரகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் என மொத்தம் 8 குழந்தைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



