கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.

இந்த துயர சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாளான இன்று, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே தவெக சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் நமது குழு கள ஆய்வு மேற்கொண்டது. அங்கு சாலை விரிவாக்கம் போன்ற எந்த பெரிய கட்டமைப்பு மாற்றமும் செய்யப்படவில்லை. கடைகளின் மேற்கூரைகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், "என் வாழ்வில் ஆறாத ரணமாக, தீராத வலியாக இந்த நாள் உள்ளது" என பதிவிட்டு 41 பேருக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.