தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கிய நூறு நாட்களில் பல முக்கிய பணிகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் கள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு சேவைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. உயர்கல்வித்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து இந்த அதிரடிப்படை செயல்பட்டு வருகிறது.
இந்த நூறு நாட்களில் நான்காயிரத்து இருநூற்று முப்பத்தொரு புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அறிவுசார் குறைபாடுடன் காணப்பட்ட நூற்று பதினொரு நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன ஐம்பத்து எட்டு பெண்களையும், தொண்ணூற்று நான்கு குழந்தைகளையும் கண்டுபிடித்துள்ளனர். குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள சூழல்கள் உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளன. ஐம்பத்து நான்கு குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிப்படிப்பை இடை நிறுத்திய அறுநூற்று முப்பத்தாறு மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவி செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பல்வேறு குற்றச் சம்பவங்களில் இந்த சிறப்பு அதிரடிப்படை களப்பிரிவினர் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கியதுடன், முந்நூற்று முப்பத்து நான்கு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றத்தடுப்பு மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கல்வி நிறுவனங்களில் பதினான்காயிரத்து இருநூற்று முப்பத்தொரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பிற பொது இடங்களில் முப்பத்து நான்காயிரத்து அறுநூற்று முப்பத்திரண்டு நிகழ்ச்சிகளும், புலம் பெயர் தொழிலாளர்களிடையே இரண்டாயிரத்து இருநூற்று முப்பத்தாறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட பதினைந்து இலட்சத்து எழுபத்தேழாயிரத்து நானூற்று அறுபது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் முறையாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் பயனாக பல பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை எவ்வித தயக்கமும் அச்ச உணர்வுமின்றி தானாக முன்வந்து தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில் ஏப்ரல் இரண்டாயிரத்து இருபத்தாறில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், குடும்பத்தினரால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த அச்சத்தின் காரணமாக சம்பவத்தை மறைத்து நகைகள் திருடப்பட்டதாக மட்டுமே தெரிவித்த நிலையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கை பெற்று உண்மையை தெரிவித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதேபோல் மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் பள்ளி மாணவிகள் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் போக்சோ சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மதுரை மாநகரில் அடையாளம் தெரியாத பகிர் தானியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொண்டு, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலம் குற்றம் சாட்டப்பட்ட நபரை கண்டறிந்து கைது செய்தனர். காவல்துறை விசாரணையை திசை திருப்பவும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உதவவும் முயன்ற மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். இத்தகைய தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தயக்கமின்றி உதவியை நாடவும், குற்றங்களுக்கு எதிராக புகாரளிக்கவும் ஏதுவான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த சிறப்பு அதிரடிப்படை தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும் நோக்குடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



